Monday 11 April 2011

நான் ஜோதிமணி...

 


நான் ஜோதிமணி... வயது 35. எம்.ஏ., எம்.ஃபில் பட்டதாரி!
கரூர் மாவட்டம் பெரிய திருமங்கலம்தான் நான் பிறந்த கிராமம். அப்பா விவசாயி. அமராவதி ஆற்றங்கரையின் ஒரு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் இன்று இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸின் செயலாளராய் ஆனதற்கு ஒரே காரணம்... மக்கள் பணி மீது எனக்கிருந்த ஆர்வம். உடுமலைப்பேட்டை கல்லூரியில் படிக்கும்போதே, கல்லூரி தேர்தலில் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது என்.எஸ்.எஸ். கேம்ப்புக்காகப் போனபோது சாதாரண மக்களோடு தங்கி, சாப்பிட்டு, வேலைபார்த்த அனுபவங்களில்தான் ஆரம்பித்தது என் பொதுவாழ்க்கை. அதன்பிறகு தொடர்ந்து இளைஞர் காங்கிரஸில் பல்வேறு பதவிகள், பரமத்தி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக 10 ஆண்டுகள் என தொடர்கிறது என் மக்கள் பணி!


Rahul Gandhi received by Jothimani - Karur Congress Candiate

சகோதர, சகோதரிகளே...
 
இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து உங்கள் உணர்வுகளை முழுமையாக அறிந்தவள் நான். மகளாய், சகோதரியாய், தோழியாய் உங்கள் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வதையே வாழ்க்கையாக நினைப்பவள். இந்த மண்ணின், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை வெறும் கடமையாக அல்ல... உரிமையாய், உணர்வுபூர்வமாய் எடுத்துச் செய்ய எப்போதும் காத்திருப்பவள். பதவி, பணம், வசதிகளைத் தாண்டி ஊழலற்ற நேர்மையான அரசியல் குறிக்கோளுக்காகவே பொதுவாழ்க்கைக்கு வந்தவள். வெறும் வார்த்தைகளால் அல்ல, வாழும் வாழ்க்கையாலேயே இதை நிரூபித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அடுத்த கட்டமாகவே நம் கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைக்க வேண்டுகிறேன்!

அதற்கு முன்பு என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். காரணம்... அரசியலில் சுயநல ருசியும், அதிகாரப் பசியும் அதிகமாகிக் கொண்டே வருகிற காலமிது. பதவி, பணம், அதிகாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வளரும் அரசியல், ஜனநாயகத்தைப் பிடித்த நோய். இதனாலேயே சமீப காலமாக மக்கள் விரக்தியோடு யாரோ ஒருவருக்கு வாக்களிப்பதும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்த வேட்பாளர்கள் வாக்காளர்களை அலட்சியப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஓடி வந்து ஓட்டு கேட்டவர்கள் காணாமல் போக, உதவிக்கு ஆளின்றி ஐந்தாண்டுகள் மக்கள் நிர்க்கதியாய் நிற்கும் நிலைம நீடிக்கிறது.

இப்படியே போனால் முழுக்க முழுக்க பணம் உள்ளவர்களின் வியாபார விளையாட்டாக அரசியல் மாறிவிடும் அபாயம் இருக்கிறது. அன்று மக்கள் இன்னும் அரசிடமிருந்து அந்நியப்பட்டு அவதிப்பட நேரலாம். இந்த நிலைமை மாற, வேட்பாளர் மக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்வதும், மக்கள் வேட்பாளரின்    தகுதிகளைப் புரிந்து ஓட்டு போடுவதும்தான் ஒரே வழி!

வாக்குச் சீட்டுதான் உங்களின் அஹிம்சை ஆயுதம். உங்கள் வேட்பாளர்களின் தகுதிகளை முழுமையாக அறிந்து அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். ஒரு சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆயுதத்தை, சொற்பப் பணத்துக்கும் அதிகார மிரட்டலுக்கும் விற்றுவிடாதீர்கள்!
ஆகவே... உங்களுக்கும் எனக்குமான புரிந்துணர்வே நமது தொகுதிக்கான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். நான் உங்களில் ஒருத்தி. உங்களுக்காக ஒருத்தி. நான் கடந்து வந்த பாதையை, என் தகுதிகளை முழுமையாக நீங்கள் அறிந்து கொள்ளவே இந்தத் துண்டறிக்கைகள்...      

நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்..?
**************************************
எம்., எம்.ஃபில் படித்திருக்கிற நான் அடிப்படையில் ஓர் எழுத்தாளர். ஒரு நாவல் உள்பட மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். 99-ம் ஆண்டுக்கானஇலக்கியச் சிந்தனை விருது, 2001-ல் பெண் எழுத்தாளர்களுக்கானசக்தி விருதுவாங்கியிருக்கிறேன். அரசியலுக்கு நான் வந்தது பதவி செல்வாக்குக்கோ, வசதியான வாழ்க்கைக்கோ அல்ல. எழுத்தாளர் என்ற முறையில் சமூகத்தில் ஒரு மரியாதையான இடத்தையும், கல்வித் தகுதி மூலம் வசதியான வாழ்க்கையையும் என்னால் அடைய முடியும். சிறுவயதிலிருந்தே அரசியல் என்னை இழுத்ததற்குக் காரணம், மனதில் எப்போதும் எரிந்து கொண்டிருந்த சமூகப் பொறுப்பு என்னும் நெருப்பு. இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் நான் வைத்திருக்கும் சத்தியமான பாசம். இந்த சமூகம் எனக்களித்த நல்ல வாய்ப்புகளை இந்த சமூகத்துக்கு திருப்பிக் கொடுக்கும் வாய்ப்புக்காகவே நான் தேர்தல் அரசியலுக்கு வந்தேன்!

Rahul Gandhi speech about Jothimani during campaign at Karur 6april2011

ஒரு தேசிய இயக்கத்தில் இருந்தால்தான் மத்திய அரசிடமிருந்தும் மாநில அரசிடமிருந்தும் நம் தொகுதியின் கடைக்கோடி மக்கள் வரை நலத் திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்க முடியும் என்பது என் எண்ணம். அதுவும்     காங்கிரஸ் என்ற மகத்தான பேரியக்கத்தில்தான் இன்றைய இளைஞர்களுக்கான எழுச்சியும் நம் எதிர்கால வளர்ச்சிக்கான புரட்சியும் புதைந்து கிடக்கிறது என்ற உண்மையை உணர்ந்தே அந்தப் பேரியக்கத்தில்      இணைந்தேன்!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் நம்மால் மக்கள் பணிக்கான மகத்தான வழித்தடத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே கடந்த பத்தாண்டுகளாக பொதுவாழ்க்கையில் கடுமையாக உழைத்து வருகிறேன். 10 ஆண்டுக்கால நேர்மையான அரசியல், மக்கள் பணியைப் பார்த்துவிட்டே என்னை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக  நியமித்தார் திரு.ராகுல்காந்தி அவர்கள். கரூர் மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் தொடங்கி அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வரை நான் வகித்த பல்வேறு கட்சி பொறுப்புகள் அளித்த அனுபவங்களே எனக்கான நம்பிக்கை விதைகள். இந்தியாவின் பல மாநிலங்களில் வேலை செய்த அனுபவம், கட்சி சார்பாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் பார்த்த அந்த இடங்களின் வளர்ச்சி, அந்த மக்களுக்கு கிடைத்துள்ள வசதிகள், அந்த இளைஞர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகள் நமது தொகுதிக்கும் கிடைக்க வேண்டும் என்கிற கனவுதான் இந்தத் தேர்தலில் என்னைக் களம் இறக்கியுள்ளது!   

மகாத்மா காந்தியிலிருந்து காமராஜர், ராஜீவ்காந்தி வரை பெருந்தலைவர்களின் சரித்திரங்களைப் படித்து வளர்ந்தவள் நான். கண்முன்னே நடக்கும் தவறுகளை, சுரண்டல்களை கண்டும் காணாமல் மௌன சாட்சியாய் வாழும் மனமின்றி அரசியலுக்கு வந்தவள். நேற்றைய தலைமுறையின் விவேகத்தையும் புதிய தலைமுறையின் வேகத்தையும் இணைக்கும் புள்ளியில் நின்று உங்களுக்காக உழைப்பதே என் வாழ்வின் லட்சியம்... சந்தோஷம். இதற்காகவே நான் அரசியலுக்கும் இந்தத் தேர்தல் களத்துக்கும் வந்திருக்கிறேன். உங்களுக்காக உழைக்கவே இன்னும்... இன்னும்... காத்திருக்கிறேன்!


நீங்கள் ஏன் எனக்கு ஓட்டளிக்க வேண்டும்..?
*****************************************************
என்னையோ என் பின்னணியையோ முன்வைத்து அல்ல... எனது தகுதியையும் உழைப்பையுமே முன்வைத்து உங்கள் முன்பு நிற்கிறேன். 22 வயதில் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக போட்டியிட்டு வென்று, 96-லிருந்து 2006வரை 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.

இந்த 10 ஆண்டுகளில் முடிந்த வரை உண்மையாக, வன்மையாக பல விஷயங்களை சாதித்துக் காட்டியிருக்கிறேன். என் சொந்த கிராமத்தில் 15 வருஷங்களாக குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவித்த தலித் மக்களுக்கு போராடி குடிதண்ணீர் வாங்கித் தந்தது என்வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம். எனது ஊராட்சிக்கு உட்பட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமங்களில் குடிநீர் வசதி, தெருவிளக்குகள், பள்ளிக்கட்டிடங்கள்,          நியாயவிலைக் கடை கட்டிடங்கள், மழை நீர் வீணாகாமல் சேமிக்க குளங்கள், பள்ளிக் குழந்தைகளுக்கான கம்ப்யூட்டர் மையம், கிராமப்புறக் குழந்தைகளின் படைப்புத்திறனை ஊக்கப்படுத்தும் கலை முகாம்கள், குழந்தைகளுக்கான நூலகம் ஆகிய பணிகளை நிறைவேற்றியிருக்கிறேன். அரசாங்கத் திட்டங்களை அணுகிப் பெற்றும், நமது மாவட்டத்துக்கு வெளியே மக்கள் பணியாற்றும் நண்பர்களின் உதவியோடும் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன!

அதேபோல குடிநீர் - ஆற்றுநீர் சுற்றுச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் கோழிப்பண்ணைகள், நூறுநாள் வேலைத்திட்டத்தில் கூலிக்குறைவு போன்ற மக்கள் போராட்டங்களில் மக்கள் பக்கம் நின்று களப்பணியாற்றி வெற்றி பெற்றிருக்கிறேன். அந்தப் போராட்ட அனுபவங்களின் மூலம், மக்கள் சக்தி ஏற்படுத்தும் மகத்தான மாற்றங்களை பார்த்திருக்கிறேன். உண்மையில் மக்களின் அந்தக் கூட்டு முயற்சிதான் எனக்கு எப்போதும் நேர்மையின் பாதையில் நடைபோட உந்துசக்தியாக இருக்கிறது. இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, காணாமல் போகிறவர்களின் பட்டியலில் நிச்சயமாக நான் இடம் பெற மாட்டேன்.

ஒவ்வொரு கணமும் தினமும் உங்களுக்காக செலவழிப்பதே என் மகிழ்ச்சி. இப்போதும் உங்கள் வழியில், உங்களோடு, உங்களுக்காக போராடவும் வெற்றிபெறவும் வாய்ப்புத் தாருங்கள் என்று கேட்டுத்தான் இந்த சட்டமன்றத் தேர்தல் களத்தில் நிற்கிறேன்... புதிய நம்பிக்கைகளோடும் புதிய கனவுகளோடும். வீட்டைச் சுத்தப்படுத்துவதும், வீதியைச் சுத்தப்படுத்துவதும், நாட்டைச் சுத்தப்படுத்துவதும் நம் கடமை. நான் என் வீடு தாண்டி வீதியையும் நாட்டையும் சுத்தப்படுத்த விரும்புகிறேன். ப்ளீஸ்... வாக்களிக்க வாருங்கள், ஊழல் இல்லாத வளர்ச்சிப்பாதையில் ஓர் உலகத்தை உருவாக்குவோம்!