Monday 11 July 2011

எது சமச்சீர் கல்வி?

எது சமச்சீர் கல்வி?


சமச்சீர் கல்வி  தேவையா?இல்லையா?,நடைமுறைப் படுத்தப் படுமா?படாதா?அல்லது தாமதமாக நடைமுறைப் படுத்தப் படுமா? புத்தகங்கள் அச்சடிக்கச் செலவான 200 கோடி ரூபாய்க்கு யார் பொறுப்பு?அந்த 200 கோடி ரூபாய் பாடத்திட்டம் உண்மையான சமச்சீர் கல்விக்கு உத்தரவாதம் அளிக்கிறதா?
தமிழக அரசியலில் எழுதாத விதிகளிருக்க சென்ற அரசின் திட்டங்களில் ஒன்றை இந்த அரசை தொடரச் சொல்லி வற்புறுத்துவது  நியாயமா?!
இந்த மேலாட்டமான விவாதங்களில் உண்மையான  சமச்சீர் கல்வி அமிழ்ந்து ஆழப் போய் விட்டது.

எது சமச்சீர் கல்வி?
அடிப்படை  வசதிகள் இல்லாத,எட்டாம் வகுப்பு படித்த பின்பும் எழுத்துக் கூட்டிப் படிக்கிற நிலையில் மாணவர்களை வைத்திருக்கிற , இன்றும் சாதிய வேறுபாடுகளுக்கு ஒன்றுமறியாத அப்பாவிக் குழந்தைகளை உள்ளாக்குகிற ,சரியான கழிப்பறைகளோ,விளையாட்டு மைதானங்களோ இல்லாத,அதன் அவசியத்தைக் கூட உணராத, மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட ஆசிரியர்களின்  சொந்த முயற்சியால் மட்டுமே பிழைத்திருக்கிற ,வேறு கதியற்ற கடைக்கோடி மக்களின் கனவுகளுக்கு ஒரெ புகலிடம் என்ற அளவில் மட்டும் உயிர்த்திருக்கிற அரசு பள்ளிகள் ஒருபுறம்
எந்தவிதமான வரையறைகளுக்கும் ,விதிகளுக்கும் உட்படாமல்,அவற்றை அலட்சியப் படுத்தி ,முறையான கட்டிடங்களோ (அரசு பள்ளிகள் இந்த விஷயத்தில் எவ்வளவோ பரவாயில்லை.நன்றி:சர்வ சிக்ஷா அபியான்),தரமான தகுதி வாய்ந்த  ஆசிரியர்களோ இல்லாத,அப்படியிருந்தாலும் அவர்களை ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டுகிற,குழந்தைகளின் கல்வியோடு மட்டுமல்லாமல் உயிரோடும் விளையாடுகிற, புற்றீசல் போல் பெருகி வருகிற  ஆங்கிலப் பள்ளிகள் மறுபுறம்..( .கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகளை கொடூரமாகப் பறிகொடுத்த பின்னும் எதுவும் இங்கே குறிப்பிடும்படியாக மாறிவிடவில்லை என்பதும்,இந்தப் புற்றீசல் பள்ளிகளில் பெரும்பாலனவை அரசு அனுமதி பெற்றவை என்பதும் தான் மிகப் பெரிய கொடுமை)

கம்பீரமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள,மறந்தும் கூட மாணவர்களை  விளையாட்டு மைதானம் பக்கம் அனுப்பி விடாத,பள்ளி வளாகத்திற்குள் தாய் மொழியில் பேசினால் அபராதம் விதிக்கிற ,பத்தாம் வகுப்பு ,பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பாடங்களை எல்.கே.ஜி.யிலிருந்தே சொல்லித் தருகிற  அதீதப் பொறுப்புணர்வு மிகுந்த ,அதற்கு விலையாக அடுத்த தலைமுறையாவது நன்றாகப் படிக்கட்டும் என்று நியாமாக ஆசைப் படுகிற பெற்றோர்களின் வேர்வையை மட்டுமல்ல இரத்தத்தையும் சேர்த்து அரசுகளின் பரிபூர்ண ஆதரவோடு(இந்த விஷயத்தில் மட்டும் அடுத்தடுத்து மாறுகிற அரசுகளிடயே ஒத்த கருத்து இயல்பாகவே எற்பட்டு விடுகிறது.!)உறிஞ்சிக் கொண்டிருக்கிற ஆங்கில ,மெட்ரிகுலேசன் பள்ளிகள்  இன்னொருபுறம்
இதிலிருந்து விதிவிலக்காக இயங்குகிற பள்ளிகள் மிகக் குறைவு.
குழந்தைகள் கல்வி பற்றிய ஏராளமான கனவுகளோடு வளர்கிறார்கள்.அந்தக் கனவுகள் தான் நாளை நம் மாநிலத்தை,தேசத்தை வழிநடத்தப் போகிறது .ஆனால் அவர்களுக்குப் பள்ளிகளில் கிடைப்பதென்னவோ கனவுகளற்ற ஒரு கருப்பு வெள்ளை உலகம் தான்.அதுவும் கூட அதீத வித்தியாசத்தில்
நிலைமை இப்படி இருக்க ,பாடத்திட்டத்தை மாற்றுவதன் வழியாக  மட்டுமே சமச்சீரான கல்வியைக் கொண்டு வந்து விட முடியுமா? என்கிற அடிப்படையான கேள்வி எழுகிறது.
முதலில்   தரமான ,தொலைநோக்குப் பார்வை உள்ள, வேகமாக மாறிவரும்  காலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய,அறிவியல் பூர்வமான ,நமது  தாய்மொழி,பாரம்பரியம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ,,அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குகிற ஒரு கல்விக் கொள்கைதான் இன்றைய முதல் தேவை.அது தான் முழுமையான சமச்சீர் கல்வியின் துவக்கமாக இருக்க முடியும்.
கல்வி சமூக முன்னேற்றத்தின் ஒரு முக்கிய அங்கம்.கல்வியின்றி சமூக முன்னேற்றமில்லை என்று சொன்னால் அது மிகையில்லை.குறிப்பாக  தலித்துகள்,பெண்கள்,மலை சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரின் முன்னேற்றமும் தரமான கல்வியின் மூலம் மட்டுமே சாத்தியம்.அந்தக் கல்வியை இலவசமாக பெறுவது அனைவரது உரிமை.அதைத் தருவது அரசின் கடமை.
இதைப் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.அவரது அரசாங்கம்  தொலைநோக்குப் பார்வையோடும்,மிகத் தீவிரமான அர்ப்பணிப்பு உணர்வோடும்  தரமான ,இலவசக் கல்விக்கு ஆரம்பப் பள்ளிக்கூடங்களைத் திறந்தது. பள்ளிக்கூடங்கள் இருந்தாலும் கல்வி பெறுவதற்கு வறுமையும் , வயிற்றுப் பசியும்,  ஒரு தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்து ஒரு தலைவருக்குரிய தாயுள்ளத்தோடு மதிய உணவு திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாகக் கொண்டு வந்தவர் காமராசர் .(நம்மில் பலர்  மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் என்று வரலாற்றை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்)
அன்றும் தனியார் பள்ளிகள் இருந்தன. ஆனால்  கல்வி வியாபாரம் ஆக அனுமதிக்கப் படவில்லை என்பதும் , பணப்புழக்கம் அதிகம் இல்லாத அன்றைய சூழலில் தரமான கல்வி இலவசமாக வழங்கப் பட்டது என்பதும் முக்கியமானது. அன்றைய தனியார் பள்ளிகள் சமூகத்திற்கான அறப்பங்களிப்பாகவே பள்ளிகளை நடத்தின என்பதையும் நினைவு கூரவேண்டியுள்ளது. 
கல்வியை வழங்குவது மட்டுமல்லாமல் பரவலாக்குவதும் அன்றைய அரசாங்கத்தின் முன்பு இருந்த முக்கிய சவால்.அதில் அவர் அரசாங்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றி கண்டது. ஆரம்பக் கல்வியில் மட்டுமல்லாமல்,தொழிற் கல்வியிலும், உயர் கல்வியுலும் தனிக்கவனம் செலுத்தியது.
அதன் பயனைத்தான் தமிழகம் இன்று வரை அனுபவித்து வருகிறது.தொழில் வளர்ச்சியில் தமிழகம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக முன்னனியில் இருப்பதற்கு மற்ற வட இந்திய மாநிலங்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பிக்கும் பொழுதே இங்கு ஒரு பகுதியினர் கல்வி கற்று  வெளியே வந்து விட்டனர் என்பதும் முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது

அன்புடன்
செ.ஜோதிமணி